Tuesday, August 8, 2017

சக்தி கொடு! - 10 சிவராம் ஜெகதீசன்

வைட்டமின் B2
*************
வைட்டமின் B2 அல்லது ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின், உடலின் சக்தி உருவாக்கும் செயல்பாட்டிலும், ஆண்டிபாடீஸ் எனப்படும் நோயெதிர்ப்பு செல்கள் உருவாக்கத்திலும், ஆரோக்கியமான கண்களுக்கும், திசுக்கள் சேதாரத்தைப் பழுது பார்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
B2 வைட்டமின், உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதிலும், ஆண்ட்டி ஆக்சிடண்ட்டாகச் செயல்பட்டு கேன்சர் போன்ற நோய்கள் வராமல் காப்பதிலும், தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ராடிகல்களுக்கு இன்னொரு எலெக்டிரானைக் கொடுத்து அதை நடு நிலைப்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வைட்டமின் B2, மூளையின் செல்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்குவதன் மூலம் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. மேலும் ஹோமொசிஸ்டைன் என்ற அமினோ அமிலத்தை உடைப்பதன் மூலம் இதயத்தையும் பாதுகாக்கிறது. இந்த ஹோமோசிஸ்டைன் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதய நோய்களும், ஏன் ஸ்டிரோக் என்று சொல்லப்படும் பக்கவாதமும் வரலாம். மேலும் காடராக்ட் எனப்படும் கண்புரை வராமல் காப்பதிலும் வைட்டமின் B2 பங்கு வகிக்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 உடலுக்குத் தேவையான வேதிப் பொருளாக மாற்றப்பட ரிபோபிளேவின் அவசியம் தேவை. அமினோ அமிலங்களை, வைட்டமின் B2 நியூரோ டிரான்ஸ்மிட்டர்களாக மாற்றி சிந்தனைச் செயல்பாட்டுக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. தசைகளின் சக்திக்கு உதவுவதால், விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
உண்ட உணவான கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட்டில் இருந்து சக்தியை பிரிப்பதற்கு வைட்டமின் B2 முக்கியத் தேவை. இந்த அடிப்படைச் செயல்பாடு உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவை. அதனால் இந்த தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமினை சரிவிகித உணவு எடுப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உடலில் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
தையமினைப் போலவே (B1), ரிபோபிளேவினும் உடலின் முக்கிய லீடர் நியூட்ரியண்ட்டாகும்.
இந்த வைட்டமின் B2 குறைபாடு கீழ்க்கண்ட நோய் அறிகுறிகளைத் தோற்றுவித்து உடலின் பல பகுதிகளைப் பாதிக்கும்.
. ஒளியைக் கண்டால் கண்கள் கூசுவது இந்த வைட்டமினின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்றாகும்
. கண்களில் அரிப்பு
. கண்களில் நீர் வடிதல்
. கண்களில் ரத்தத் திட்டுகள்
. மையோபியா எனப்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களைக் காண முடியாமை
. உதடு மற்றும் உதட்டோரங்களில் வெடிப்பு
. பாதங்களில் வெடிப்பு
. ரத்தத்தில் அதிக ஹோமோசிஸ்டைன்
. ரத்த சோகை
. மைக்ரேன் தலைவலி
. தைராய்டு செயல்பாடு பிறழ்ச்சி
. வளர்சிதை மாற்றம் தொய்வடைதல்
. மூக்கின் பக்க வாட்டில் எண்ணெய் பசை போல ஏற்படுதல்
. சைனஸ்
. மூக்கு மற்றும் விதைப்பைகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் தோல் உரிதல்
. வாய் மற்றும் நாக்கில் வீக்கம்
. தொண்டைப் புண்
. சளிச் சவ்வுகளில் வீக்கம்
. மன அழுத்தம் மற்றும் பதட்டமான மனநிலை
இந்த B2 வைட்டமின் அதிக டோசேஜ் ஆக பொதுவாக வாய்ப்பில்லை. அதனால் அதிக டோஸால் ஏற்படும் விளைவுகளுக்கு விரிவான விளக்கம் இல்லை.
ரிபோஃபிளேவின் வைட்டமின் கீழ்க்கண்ட உணவுப் பொருட்களில் உள்ளது.
. ஈரல்
. மீன்
. கிட்னி
. பாதாம்
. புல் உண்ணும் கால்நடைகளின் பாலில் எடுக்கப்படும் சீஸ்
. புல் உண்ணும் விலங்களின் மாமிசம்
. காளான்
. முட்டை
. மிளகாய்
. ப்ரோக்கோலி
உடலின் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு வைட்டமின் B2 தேவை:
. கொழுப்பு - புரதம் - கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம்
. மருந்துகள் வளர் சிதை மாற்றம்
. உடலின் சக்தி தயாரிப்பு
. குளூடாதியோன் (Glutathione) எனப்படும் உடலால் தயாரிக்கப்படும் ஆண்டி ஆக்சிடண்ட் மறு தயாரிப்பு
. வைட்டமின் B6, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் A மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்களை ஆக்டிவ் வடிவத்துக்கு மாற்றுதல்.
கீழ்க்கண்டவை வைட்டமின் B2 உடலால் கிரகிக்கப் படுவதைத் தடுக்கும்.
. ஆல்கஹால்
. காப்பர்
. ஆண்டாசிட்டுகள்
. வைட்டமின் B3 மற்றும் C
. தியோஃபிலின் எனப்படும் ஆஸ்த்மா மருந்து
. ஆண்டிபயாடிக்குகள்
. கவுட் எனப்படும் கீல்வாதத்துக்கு எடுக்கும் மருந்துகள்
இந்த வைட்டமின் B2 வின் தினசரி பரிந்துரைக்கப் பட்ட அளவு பின் வருமாறு:
பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை - 0.4 முதல் 1.0 மில்லி கிராம்
7-10 வயது - 1.4 மிகி
11-14 வயது - 1.6 மிகி
15-22 வயது - 1.7 மிகி
ஆண்கள் 23-50 வயது வரை - 1.6 மிகி
ஆண்கள் 51 வயதுக்கு மேல் - 1.4 மிகி
பெண்கள் 11-22 வயது - 1.3 மிகி
பெண்கள் 23 வயதுக்கு மேல் - 1.2 மிகி
கர்ப்பிணிகளுக்கு - 1.5 - 1.6 மிகி
பாலூட்டும் தாய்மார்களுக்கு - 1.7-1.8 மிகி
வைட்டமின் B2 வைத் தேவையான அளவுகளில் எடுத்து உடல் ஆரோக்கியம் காப்போம்.

No comments: